அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது, இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில், பழைய போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் வருடந்தோறும் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், வடக்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் விமான நிலையத்தில், போர் விமான சாகச நிகழ்ச்சி கடந்த 13 ஆம் திகதி நடைபெற்றது.
இதன்போது, ‘பி 17’ மற்றும் ‘பி63 கிங் கோப்ரா’ ரக போர் விமானங்கள் வானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விமானங்களில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது உடனடியாக தெரியவில்லை.
இருந்தாலும், ஆறு பேர் பலியாகி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பி 17 போர் விமானத்தில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும் என்றும், பி 63 கிங் கோப்ரா விமானத்தில் ஒரு பைலட் மட்டுமே பயணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில்,தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய ஆய்வாளர்கள் சம்பவ இடத்தில் விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.