Home Local news பகிருங்கள் ;- நிஜமாகவே இலங்கையின் நிலை தான் என்ன?

பகிருங்கள் ;- நிஜமாகவே இலங்கையின் நிலை தான் என்ன?

போராட்டம் இதுவரை காணாத மக்கள் எழுச்சி மூலம் பரிணாமம் கண்டுள்ளது. ஓக்கே.

இலங்கை அரசாங்கம் இப்படி ஒரு எதிர்ப்பை தன் மக்கள் திசையில் இருந்து எதிர்கொண்டதில்லை. ஃபைன்.

ஊழலை ஒழித்துக் கட்ட இதுவரை இல்லாத அளவில் இப்போது எல்லாத் தரப்பும் எதிர்ப்பை காட்ட தொடங்கியுள்ளது. கரெக்ட்.

முதல் தடவையாக இளைஞர்கள் மத்தியில் இருந்து வரும் எதிர்ப்பு.

கல்விமான்கள், செல்வந்தர்கள், சக்திவாய்ந்த தனிநபர்கள், இன்னபிற so-called elite சமூகம் எல்லாம் கூடி நிற்கிறது. ஒரே நோக்கம் கொண்டு. சரி.

ராஜபக்ச கூட்டத்தை வீட்டிற்கு அனுப்பும் படி கோஷம் இட்டபடி மக்கள் அலை தினமும் வீதியில். நாளை மறுதினம் ஆனால் ஒரு வாரம் கணக்காகி விடும்.

ரைட்.

What’s next?

அதற்கு தான் விடை தெரியாமல் பலரும் விழி பிதுங்கி உள்ளோம். Literally விழி பிதுங்கி நிற்கிறோம்.

இந்த மக்கள் போராட்டத்திற்கு என்ன காரணம் என்று வீதிக்கு வந்து போராட்டம் நடத்துபவர்களிடம் கேளுங்கள். முடிவற்ற மற்றும் நியாயமற்ற மின்வெட்டு பற்றிய பதில் இருக்கும்; வாகனங்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை; எரிவாயு சிலிண்டர்களின் பற்றாக்குறை; வாழ்க்கைச் செலவில் சடார் என ஏற்பட்ட உயர்வு. என்பன பதிலாக இருக்கும்.

அரசாங்கதிடம் கஜானா காலி.

ஏன்டா காலி பண்ணின என்று கேட்டால். வேடிக்கையான பதில் சொல்கிறது அரசு. விழுந்தது முதல் அடி. எங்க காசை எல்லாம் நீ செலவு பண்ணிட்டு எங்க கிட்டயே கத விடுறியா என பல்லை பிடித்து கேள்வி கேட்க ஆரம்பித்தோம். அனைவரையும் பதவி விலக சொல்கிறோம்.

அரசாங்கம் விலகி விட்டால் இது எல்லாம் மாறி விடுமா?

உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் என்ன?

சராசரியாக USD 1,000,000,000 பெறுமதியான சர்வதேச கடனை ஜூலை 25, 2022 அன்று முழுவதுமாக இலங்கை செலுத்த வேண்டும். இதில் இருதரப்பு மற்றும் பலதரப்புக் கடன் தொகைகள் என வேறு கணக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.. ஜனவரி 2022 இல் இலங்கை அரசால் செலுத்தப்பட்ட தொகையின் இரட்டிப்பான தொகையை இன்னும் – மூன்று மாதங்களுக்குள் – மொத்தத் தொகையாக செலுத்த வேண்டும்.

அரசு கவிழ்ந்தால் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை வரும். தேர்தல் நடத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும், அரசாங்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதற்குள் ஆட்சி மறுசீரமைப்பு செயல்முறை ஒன்றை எட்ட முடியாத நிலையில் இருந்தாலும் இந்த பணம் செலுத்தப்பட வேண்டும். Dot.

கட்டவில்லையென்றால்?

“கிட்டத்தட்ட உள்நாட்டுப் போரைப் போலவே மோசமானதொரு நிலை” என்று பைனான்சியல் டைம்ஸ் விவரித்த மோசமான (disorderly default) நிலைக்குள் இலங்கை நுழையும். அது எப்படி இருக்கும் என்று படம் போட்டு பார்க்க வேண்டுமானால், மார்ச் 2020க்குப் பிறகு லெபனானின் நிலைமையை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.

READ MORE >>>  இலங்கையின் பொருளாதாரம் 1.5 சதவிகிதத்தால் வீழ்ச்சி

2019 இன் கடைசி காலாண்டில் இருந்து (disorderly default நிலைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு), லெபனான் பவுண்டு அதன் மதிப்பில் 90 சதவீதத்தை இழந்தது, மேலும் 2020 இல் வருடாந்த பணவீக்கம் 84.9 சதவீதமாக இருந்தது. ஜூன் 2021 நிலவரப்படி, அரசாங்கப் புள்ளிவிவரங்களின்படி, நுகர்வோர் பொருட்களின் விலைகள் முந்தைய இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளன. பணக்கார லெபனானியர்களைத் தவிர மற்ற அனைவரும் தங்கள் உணவில் இருந்து முட்டை மீன் பருப்பு இன்னபிற புரத மேட்டரை எல்லாம் குறைத்து, தங்கள் கார்களுக்கு எரிபொருளாக வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்,
And you know what! மின்வெட்டுகளால் அவதிப்படுகிறார்கள். வெட்டுற அளவு கூடி கொடுக்குற அளவு குறைந்து வருகிறது. மின்சாரத்தின் விலை நெருக்கடி தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம். ஜெனரேட்டர் உள்ளவர்கள் கூட எரிபொருளை வாங்கி மின் பயனை பெறமுடியாத நிலை அதிகரித்து வருகிறது.
லெபனான் முழுவதும், எரிபொருள் தட்டுப்பாடு பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்க வழிவகுத்தது.
Taxi ஓடும் அண்ணன் மார்கள் அங்கிள்மார்கள் சில லிட்டர்களை மட்டுமே வாங்க மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். Gas station இல் no stock board தொங்கினால் அந்த சில லீட்டர்களும் இல்லை. மருந்து விநியோகத்தில் முடக்கம். வலி நிவாரணிகள் மற்றும் இரத்த அழுத்த மருந்துகளை பெறுவதில் சிக்கல். Depression, stressற்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகள் போன்றவை முற்றிலும் இல்லாது போய்விட்டன. இன்சுலின் கிடைப்பதில் சிக்கல். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுக்கான சத்து மாவுக்கு செலுத்தியதை விட ஏழு மடங்கு அதிகமாக மக்கள் கொடுக்கிறார்கள்.

disorderly default நிலைக்கு இலங்கை வராமல் தவிர்க்க வேண்டும். இங்கே அதிகளவான அரச வைத்திய சாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது, உணவு பற்றாகுறை, சமைக்க எரிவாயு, போக்குவரத்து மற்றும் மின்சார உற்பத்திக்கு எரிபொருள் தேவை. இன்டர்நெட் wifi எல்லாம் எரிபொருள் இல்லாமல் போனால் பெட்டிகட்ட வேண்டிய நிலைக்கு வந்துவிடும். இளைஞர்கள் பாடு??

இந்த நிலை வராமல் குறைப்பதற்கு ஒரே வழி, IMF மற்றும் ISB உடன் இணக்கப் பேச்சுவார்த்தைகளில் விரைவாக நுழைவதுதான். உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் சாந்த தேவராஜன் கருத்துப்படி, இந்த நடவடிக்கைகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தொடங்கப்பட வேண்டும்.

ஆட்சி கவிழ்ந்து ஒருவேளை பொதுத் தேர்தல் நடந்தால்?

ஏப்ரலில் அரசாங்கம் ஒன்றுசேர்ந்து, IMF உடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகளை அனுப்புகிறது மற்றும் ISB பத்திரம் வைத்திருப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு சிறப்பு சட்ட நிறுவனத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தச் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில், பொதுத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன; பேச்சுவார்த்தை உடனடியாக நிறுத்தப்படும். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை தரப்பில் நம்பகமான தரப்பு இருக்காது (இராணுவ ஆட்சி அமைந்து அரசு கையகப்படுத்தப் பட்டாலும் அதே விளைவை ஏற்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்).

READ MORE >>>  பஸ் மோதி முதியவர் பலி: இருவரும் தலைமறைவு

தேர்தல் ஆணையம் தேவையான காகிதம் மற்றும் எரிபொருள் என்பவற்றை “கண்டுபிடித்து” – வாக்குச்சீட்டுகளை அச்சிட்டும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அதிகாரிகளை அனுப்பியும் – ஜூன் மாதம் தேர்தல் நடத்தலாம். கடைசியாக நடந்த தேர்தலில் ஏழு பில்லியன் ரூபாய்க்கு மேல் செலவானது. இம்முறை அதிகம் தேவைப்படலாம். அனேகமாக, அரசாங்கம் தேவைப்படும் பில்லியன்களை மற்றொரு “பண அச்சடிப்பு” மூலம் வழங்கலாம். விளைவு: உயர் பணவீக்க சுழலில் நாம் அனைவரும் – நாளை பிறக்கவிருக்கும் குழந்தை உட்பட- மாட்டிக்கொள்வோம். Dead end.

அப்படியான தேர்தல் நடந்து, புதிய அமைச்சுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருவோர்- தற்போது இருப்போரை விட உயர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தற்போதைய ஜனாதிபதிக்கு அமைச்சரவையை நியமிப்பதற்கான சர்வ நிறைவேற்று அதிகாரங்களை வழங்கும் 20வது திருத்தம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. புதிய பாராளுமன்றத்தில் அவருக்கு எதிரானவர்கள் ஆதிக்கம் செலுத்தினால், 2001ல் நடந்ததை விட மோசமான இழுத்தடிப்பு போராட்டம் நடக்கும்.

இதையெல்லாம் செய்து முடிப்பதற்குள் ஜூலை 2022 ஆகிவிடும். இறக்குமதிக்குக் கொடுக்கப் பணம் இருக்காது; கடன் திருப்பிச் செலுத்த பணம் இருக்காது. அதே டெய்லர், அதே வாடகை.

சில மணி நேர மின்சாரம் கிடைக்கும். விறகுடன் சமைக்க பழக வேண்டும்., எரிபொருள் எதுவுமே இல்லை என்று நிலைவரும். கடனை எல்லாம் திருப்பி செலுத்த முடியாது என்பதால் புதிதாக வாங்கவும் முடியாது. ஏற்றுமதி அழியும். சுற்றுலா துறைக்கு குட்பை சொல்லவேண்டிய நிலை வரும். நடுத்தர வருமானமீட்டும் நாடு என்ற நிலையை விட்டு வறுமை கோட்டிற்கு கீழே -அதற்கும் கீழே- போய்க்கொண்டிருப்போம்.

உலக வங்கியினால், இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்ட வழக்கத்திற்கு மாறான கடினமான மதிப்பீட்டில், லெபனானில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியின் தீவிரத்தை முதல் பத்து இடங்களில் ஒன்றாக விவரித்தது. 1850 களில் இருந்து உலகளவில் முதல் மூன்று கடுமையான பொருளாதார சரிவுகளில் இது இருக்கலாம். லெபனானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2019 இல் 52 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2021 இல் 21.8 பில்லியன் அமெரிக்க டாலராக சரிந்தது. இது 58.1 சதவீத சுருக்கத்தைக் குறிக்கிறது – 193 நாடுகளின் பட்டியலில் மிக அதிகமான சுருக்கமாக இது கருதப்பட்டு லெபனான் முதல் இடம் பிடிக்கிறது. ஜூலையில் நாம் disorderly default நிலைக்கு சென்றால், இலங்கை லெபனான் நாட்டுடன் போட்டியில் இருக்கும்.

தப்பிக்க என்ன வழி?

நாம் தற்போதைய பாராளுமன்றத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

READ MORE >>>  இலங்கையின் ஜனாதிபதியாக ரணிலை அறிவித்த கூகுள்

பேரழிவு தரும் 20வது திருத்தத்தை ரத்து செய்வதே முதல் மற்றும் அத்தியாவசியமான முன் நிபந்தனையாகும். முடிந்தால் 19வது திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்பட வேண்டும், ஆனால் இந்த தவறான திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இச்செயற்பாட்டில், ஜனாதிபதி தமக்கிருக்கும் சட்டபூர்வத்தன்மையை இழக்க நேரிடும், மேலும் தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகளாக நடந்து கொள்ளத் தொடங்குவார்கள்,

20வது திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டால், ஜனாதிபதியால் தாம் விரும்பியவரை பிரதமராக நியமிக்க முடியாது மற்றும் 2023 பெப்ரவரிக்குப் பின்னர் எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது. சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அவரது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் செய்யப்பட்ட முறைகேடான நியமனங்கள் ரத்து செய்யப்பட்டு புதிய நியமனங்கள் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதிசெய்து, லஞ்சப் புகார்களை திறம்பட விசாரணை செய்ய முடியும்.

இந்த புதிய பாராளுமன்றத்தில், 2015-19ல் செயல்பட்ட மேற்பார்வைக் குழுக்களை மீண்டும் செயல்படுத்த விட முடியும். பல்வேறு அரசு நிறுவனங்களை 16 குழுக்களுக்கு ஒதுக்கும் மேற்பார்வைத் திட்டம் இன்னும் நாடாளுமன்ற இணையதளத்தில் உள்ளது. இதன் மூலம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் நாட்டை கட்டமைக்கப்பட்ட முறையில் மீண்டும் கட்டியெழுப்புவதில் பங்கேற்க முடியும். மேற்பார்வைக் குழுக்களின் தலைவர்களில் இருந்து இடைக்கால அமைச்சரவையை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம். இது டொனமோர் அரசியலமைப்பின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப் பெற்ற அனுபவம் ஆகும்.

தற்போது, ​​அரசாங்கத்தில் உள்ள 11 கட்சிகளில் ஒன்பது கட்சிகள், திரு கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்திற்கு 20வது திருத்தத்தை மாற்றியமைப்பதற்கு இணையாக, முன்மொழிவுகளை செய்துள்ளது. அசம்பாவித போக்குள்ள இந்த 20வது திருத்தத்தை திரும்பப் பெறுவதற்கு ஆதரவளிக்க; பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையே பொதுவான குறைந்தபட்ச வேலைத்திட்டம் குறித்து உடன்பாடு எட்டப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகிய இரட்டைப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான முக்கியமான சீர்திருத்தங்கள் இடைக்கால அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது கடன் நெருக்கடிக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்வதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம் என்ற நம்பிக்கையை எங்கள் கடன் வழங்குநர்களிடையே உருவாக்கி, நம்மை மீட்பதற்கான பாதையில் கொண்டு செல்ல வழி வகுக்கும்.

செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வோமானால், இந்த தேசத்துரோகிகளிடம் அடிபணியாமல், இந்த நாட்டைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது.

*
*
*

ஆக்கம்: பிரதாஸ் சுப்ரமணியம்.

Prof. ரொஹான் சமரஜீவ, ஏப்ரல் 4 2022 எழுதிய பேஸ்புக் பதிவை கொண்டு தமிழில் எழுதியது.

Read the full post here: shorturl.at/ahnMS

Previous articleஎதிர்வரும் 08 ஆம் திகதி வரை மின்வெட்டு நடைமுறையில் மாற்றம்
Next articleகுடும்பத்தை வாழ வைக்க முடியவில்லை: டெலிகாம் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபர்